ஈரானுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை? சீனா மறுப்பு
சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகள் (Air-defence missile launchers) சில வாரங்களுக்குள் ஈரானுக்கு கிடைக்கவுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை சீனா முற்றாக மறுத்துள்ளது.
சீனாவிலிருந்து ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறவுள்ளதாகப் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி Reuters செய்தி வெளியிட்டு இருந்தது.
அந்த அறிக்கையின்படி, முதற்கட்ட விநியோகங்கள் மேற்கு சீனாவில் உள்ள உரும்கியிலிருந்து (Urumqi) பாகிஸ்தான் வழியாக ஈரானைச் சென்றடையும் வகையில் விமானம் மூலம் கொண்டு செல்லப்படவிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning) உரையாற்றுகையில், “தொடர்புடைய விவகாரங்களில் சீனா தனது நிலைப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த அறிக்கைகள் முற்றிலும் உண்மையற்றவை” எனக் குறிப்பிட்ட அவர், பெய்ஜிங் “எப்போதும் அமைதிக்காகவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவுமே உழைக்கிறது” என்றும் கூறினார்.




