314 KM தொலைவிலிருந்த பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தியது இந்திய ஏவுகணை
இந்திய விமானப் படையின் ‘எஸ்-400’ (S-400) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) இராணுவ நடவடிக்கையின் போது 314 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பாகிஸ்தானின் சிறப்புப் பணி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2025-26 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய வான் பாதுகாப்பு வரலாற்றில் மிக நீண்ட தொலைவில் மேற்கொள்ளப்பட்ட தரைவழித் தாக்குதல்களில் ஒன்றாகும்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில், இந்தத் தாக்குதலானது இந்திய விமானப் படையின் நீண்டதூர வான் பாதுகாப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய எல்லைக்கு அப்பால் அதிக தொலைவில் இருந்தால் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற எதிரி நாட்டின் எண்ணத்திற்கு இது முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இந்திய ரேடார்கள் எதிரி நாட்டின் அச்சுறுத்தலை சத்தமின்றி உற்றுக் கவனித்தன” என்றும், நீண்டதூரம் பாயக்கூடிய தரைவழி வான் பாதுகாப்பு ஏவுகணை அதன் இலக்கை நோக்கித் துல்லியமாக வழிகாட்டப்பட்டுத் தாக்கியழிக்கப்பட்டதாகவும் அறிக்கை விளக்குகிறது.
கடந்த 2025 மே 7 முதல் 10 வரை நடைபெற்ற நான்கு நாள் மோதலின் போது, ஒருங்கிணைக்கப்பட்ட வான் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி 2025 மே 12 அன்று ஆதம்பூர் வான்படை தளத்திற்கு நேரடியாகச் சென்று, இதில் ஈடுபட்ட வான்படை வீரர்களைப் பாராட்டினார்.
மேலும், 2025 ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இப்போரில் சிறப்பான பங்காற்றிய விமானப்படை வீரர்களுக்கு 219 குடியரசுத் தலைவரின் வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன.
இப்போரின் போது பாகிஸ்தான் தனது சிவில் வான்வெளியைத் திறந்து வைத்திருந்த போதிலும், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் இந்திய விமானப் படை கவனமாகச் செயல்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




