ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் பிரதமர் Boris Johnson
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் Boris Johnson
உக்ரைனில் பயணம் செய்த ரயிலுக்குப் பின்னால் வந்த மற்றொரு ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், Boris Johnson பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து நூலிழையில் தப்பினார்.
உக்ரைன் தலைநகர் கெய்வில் (Kyiv) இருந்து போலந்து நோக்கிப் போரிஸ் ஜான்சன் இரவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எல்லைப் பகுதியில் இந்த ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் ரயில்வே தெரிவித்துள்ளது.
போலந்து எல்லையிலுள்ள யாஹோடின் (Yahodyn) ரயில் நிலையத்தில், போரிஸ் ஜான்சன் பயணித்த ரயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில், அங்கிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ஐரோப்பாவிற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.
பிரித்தானிய பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் பாவெல், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் காரல் பில்ட், ஜெர்மன் ஜனாதிப ப்ரெட்ரிக் மெர்ஸின் நெருங்கிய ஆலோசகரான குந்தர் சாட்டர் மற்றும் ஐரோப்பிய இராஜதந்திரிகளுடன் இணைந்து போரிஸ் ஜான்சன் அதே ரயிலில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து உக்ரைன் அரசாங்கத்துடன் விவாதிப்பதற்காக இவர்கள் அனைவரும் கெய்வ் நகருக்குச் சென்றிருந்ததாக ஜெர்மனியின் ‘டெர் ஸ்பீகல்’ (Der Spiegel) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை நோக்கமற்ற மற்றும் அர்த்தமற்ற செயல் என போரிஸ் ஜான்சன் கடுமையாகக் கண்டித்துள்ளார்.




