ஈழத் தமிழர்களின் குரலாக ஒலிப்பாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக விஜய் ஒலிக்க வேண்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த காலங்களில் தமிழக மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்துள்ளனர்.
குறிப்பாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் மீதும் எமது மக்கள் மீதும் தமிழக உறவுகள் கொண்டிருந்த அளவற்ற அன்பும் பேராதரவும் எமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்கள் நீண்டகாலமாகத் தங்களது தேச அங்கீகாரத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், எமது உரிமைப் போராட்டத்துக்குப் புதிய வலுவைத் தரும் என நாம் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் நீங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச அரங்கிலும், இந்திய மத்திய அரசிடமும் எமது நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்று எமது மக்களின் துயர்துடைக்க தமிழ்நாடு எவ்வாறெல்லாம் துணை நின்றதோ, அதேபோன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம்.
‘தொப்புள்கொடி உறவுகள்’ என்ற உணர்வோடு, எமது தாயகத்தின் விடியலுக்காக உங்கள் கரங்கள் நீளும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எமக்குண்டு.” – என்று கஜேந்திரகுமார் எம்.பி. தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.




