அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வருகை
அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் ஐந்து நாள் பயணத்தின் போது, இலங்கையின் மூத்த அரசாங்க மற்றும் கடல்சார் தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர்.
“நம்மைச் சுற்றியுள்ள உலகைக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பில் உள்ள ரடிசன் ப்ளூ விடுதியில் செப்ரெம்பர் 9 முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 8வது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாட மாநாட்டில் (IMLC) டிபெல்லா உரையாற்றுவார்.
ஹார்வி இந்த மாநாட்டில் ஒரு குழுவில் பங்கேற்பார்.
இந்தோ-பசுபிக் முழுவதும் உள்ள சந்தைகளுடன் அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இணைக்கும் கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகளில் அமெரிக்க-இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இவர்களின் இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
“கொழும்பு வழியாகச் செல்லும் 80 சதவீதத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் உலகெங்கிலும் உள்ள இடங்களுக்குத் தொடர்ந்து செல்கின்றன – இது இந்தியப் பெருங்கடல் கப்பல் போக்குவரத்தின் மையத்தில் இலங்கையின் பங்கிற்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும், என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் கூறினார்.
டிபெல்லாவின் வருகை, அந்தப் பங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதோடு, இந்தோ-பசுபிக் முழுவதும் இந்த முக்கிய வர்த்தகத்தை சீராக இயங்க வைக்கும் மக்கள் மற்றும் நிறுவனங்களுடன் நமது ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.
பாதுகாப்பான மற்றும் திறமையான கப்பல் போக்குவரத்து, அமெரிக்க வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகிறது, ஒரு பிராந்திய மையமாக சிறிலங்காவின் நிலையை வலுப்படுத்துகிறது, மேலும் நமது இரு பொருளாதாரங்களிலும் செழிப்பை ஆதரிக்கிறது.
கொழும்பு கடந்த வாரம், முக்கியமாக அதன் சரக்கு மாற்று அளவுகளின் அடிப்படையில், முதல் முறையாக முதல் 20 அனைத்துலக துறைமுகங்கள் தரவரிசையில் நுழைந்தது.
1961-ல் நிறுவப்பட்ட கூட்டாட்சி கடல்சார் ஆணையம், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக அமெரிக்க அனைத்துலக கடல்வழிப் போக்குவரத்து அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பான ஒரு சுதந்திரமான கூட்டாட்சி அமைப்பாகும்.
இது ஒரு போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நம்பகமான சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தவும், கப்பல் துறையில் உள்ள நியாயமற்ற அல்லது ஏமாற்றும் நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவும் செயல்படுகிறது.




