ஐரோப்பாவின் 12 நாடுகளில் பரவி வரும் வைரஸ் தொற்று – மக்களுக்கு எச்சரிக்கை
ஐரோப்பாவில் உள்ள பன்னிரண்டு நாடுகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நுளம்புகள் மூலம் பரவும் இந்த வைரஸ், காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால், தீவிரமான சந்தர்ப்பங்களில் இது நடுக்கம், காய்ச்சல், கோமா மற்றும் என்செபலைட்டிஸ் எனப்படும் மூளைத் திசுக்களின் அபாயகரமான வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது மூளைக்காய்ச்சலையும் (மெனிஞ்சைடிஸ்) உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அல்பேனியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கொசோவோ, நெதர்லாந்து, வடக்கு மாசிடோனியா, ருமேனியா, செர்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலேயே இந்த நோய் தொற்று பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாலி மற்றும் கிரீஸில் முறையே 311 மற்றும் 157 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், ஐரோப்பா முழுவதும் உள்ள 21 பிராந்தியங்கள் தங்களின் முதல் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன.




