குழந்தைப்பேற்றிற்கான கூடுதல் சலுகைகளை அறிவித்தது வியட்நாம்
குறைந்துவரும் பிறப்பு விகிதம் மற்றும் வேகமாக அதிகரித்துவரும் மக்கள்தொகை ஆகியவற்றின் பின்னணியில், இரண்டு குழந்தைகள் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த ஓராண்டுக்குப் பின்னர், வியட்நாம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கொள்கையின்படி, இரண்டாவது குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு 6 மாத விடுப்புக்குப் பதிலாக 7 மாத விடுப்பு வழங்கப்படவுள்ளது.
மேலும், குறைமாதப் பிரசவங்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அரசாங்க மானியங்களும், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தாய்மார்களுக்கு பணமும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள தாய்மார்கள் அதிகபட்சமாக 228 அமெரிக்க டொலர்கள் வரை ஊக்கத்தொகையாகப் பெற முடியும்.
இது வியட்நாமின் சராசரி மாதச் சம்பளத்தில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமமாகும்.
வியட்நாமில் உள்ள ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) தலைவர் ஃபாம் தி லான், இந்தக் கொள்கையானது குடும்பக் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தற்போது சமச்சீரான மக்கள்தொகை வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசாங்கத்தின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
பல தசாப்தங்களாக, வியட்நாமில் அரசு ஊழியர்கள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்ததற்காகக் கட்டுப்பாடுகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் எதிர்கொண்டனர்,
ஆனால் கடந்த ஆண்டு அரசாங்கம் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியது. அரசாங்கத் தரவுகளின்படி, வியட்நாமின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.93 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
இது, மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பராமரிக்கத் தேவையான 2.1 குழந்தைகள் என்ற அளவை விடக் குறைவாகும். அதே வேளையில், சராசரி ஆயுட்காலம் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளை எட்டியுள்ளது.
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் கால் பங்காக இருப்பார்கள் என்றும், அதன் பிறகு ஒட்டுமொத்த மக்கள்தொகை குறையத் தொடங்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பிறப்பு விகிதம் அதிகரிக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொருளாதார வளர்ச்சி மந்தமடையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
புதிய ஊக்கத்தொகைகளை அரசாங்கம் ஒரு முக்கியமான நடவடிக்கை என்று வர்ணித்திருந்தாலும், பணப் பரிசுகள் மட்டும் போதுமானதாக இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டுவசதி, குழந்தை பராமரிப்பு, கல்வி மற்றும் பிற செலவினங்களுக்கு நிலையான அரசாங்க ஆதரவை வழங்காமல், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க மக்களை இணங்க வைப்பது கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
சமீபத்திய அரசாங்கக் கணக்கெடுப்பு ஒன்றின்படி, திருமணமானவர்களில் 73 சதவீதத்தினர், தாங்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதில் தங்களது வருமானமும் நிதி நிலைமையும் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறியுள்ளனர்.




