அமெரிக்கா துருக்கிக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது – இஸ்ரேல் முட்டுக்கட்டை
அமெரிக்கா, துருக்கிக்கு (Turkey) அதிநவீன F-35 போர் விமானங்களையோ அல்லது அதற்கான ஜெட் இன்ஜின்களையோ விற்பனை செய்யக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான Fox Newsக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்குச் சென்று அங்குள்ள நேட்டோ (NATO) மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
துருக்கிக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவது “மத்திய கிழக்கின் அதிகார சமநிலையைக் குலைத்துவிடும்” என்று நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
துருக்கி அதிபர் எர்டோகன் இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாலும், சிரியா போன்ற பகுதிகளில் துருக்கியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாலும், துருக்கிக்கு F-35 போன்ற அதிநவீன ஆயுதங்கள் கிடைப்பது தங்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதுகிறது.
ஆகவே ஆயுத விநியோகத்தை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது.
மறுப்பகம் ட்ரம்ப் நிர்வாகம் துருக்கியுடன் மீண்டும் சுமுகமான உறவை ஏற்படுத்த முயன்று வருகிறது. துருக்கியின் சொந்த தயாரிப்பான ‘KAAN’ போர் விமானத்திற்குத் தேவையான சுமார் 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் இன்ஜின்களை (GE F110) விற்க அமெரிக்கா விருப்பம் காட்டியுள்ளது.




