எட்னா எரிமலை வெடிப்பு : சிசிலியில் விமான சேவைகள் இரத்து
ஐரோப்பாவின் மிகப் பெரிய எரிமலையான எட்னா எரிமலை மீண்டும் வெடித்து சாம்பல் மற்றும் புகையை வெளியேற்றி வருகிறது.
இதன் காரணமாக, சிசிலியின் பரபரப்பான விமானப் போக்குவரத்து மையமான கட்டானியா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.
இத்தாலியின் விமானப் போக்குவரத்துக்கான எரிமலை கண்காணிப்பு மையம் (VONA), சாம்பல் மேகங்கள் குறித்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கட்டானியா விமான நிலையம், இன்று காலை முதல் உள்வரும், புறப்படும் விமானங்களை இரத்து செய்துள்ளது.
அதேபோல் ஈஸிஜெட், ரையன்ஏர், ஜெட்2, பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் விஸ் ஏர் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் ஏராளமான விமான ரத்துகளையும், மாற்றுப்பாதைத் திருப்பங்களையும் அறிவித்துள்ளன.
இது கட்டானியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் ஐரோப்பிய மற்றும் சில அட்லாண்டிக் கடந்த விமான சேவைகளைப் பாதித்துள்ளது.




