அதலபாதாளத்திற்கு சென்ற ரஷ்யாவின் கருவூலம் : அடுத்தக்கட்ட தடைகளும் தயார்நிலையில்
ரஷ்யாவின் போர்க்காலப் பொருளாதாரச் சுமையின் பெரும்பகுதியை வங்கிகளே சுமப்பதால், அந்நாடு பாரிய நெருக்கடியை நோக்கி தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய அரசின் உளவுத்துறை அறிக்கையொன்றில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ரஷ்ய வங்கிகளின் நிலை குறித்து ஐரோப்பிய அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதற்காகச் சமீபத்திய வாரங்களில் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு பக்க ஆவணம், மேற்கத்திய நாடுகளின் மேலதிகக் கட்டுப்பாடுகளால் வங்கிகள் பாதிக்கப்படக்கூடிய தன்மையை விவரிக்கிறது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்து நெருக்கடியை அதிகரிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
2022இல் உக்ரைன் மீது மொஸ்கோ நடத்திய முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகளை ரஷ்ய வங்கிகள் பெரும்பாலும் சமாளித்து வந்தபோதிலும், மோசமடைந்து வரும் கடன்களும், அதிகரித்து வரும் குடும்பக் கடன் சுமையும் ஒரு பூகம்பமாக மாறி வெடிக்கும் நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைனுடனான நான்கு ஆண்டு காலப் போரின் செலவு அரசின் கருவூலத்தை வற்றச் செய்து வருவதால், நிறுவனங்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் ஆதரவளிக்க ரஷ்யா வங்கிகளை அதிகளவில் சார்ந்துள்ளது.
பொருளாதாரம் தள்ளாடும் நிலையில், இது வங்கிகள் மீது அபாயங்களைச் சுமத்தியுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே பொருளாதார அமைச்சகம் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை, முன்பு 1.3 சதவீதத்தில் இருந்து 2026 இல் 0.4 சதவீதமாகவும், 2027இல் 2.8இல் இருந்து 1.4 சதவீதமாகவும் குறைத்துள்ளது.




