இஸ்ரேல் – லெபனான் இடையே அடுத்தகட்டப் பேச்சு ரோமில்
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 4 ஆம் திகதி ரோமில் நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தத்தை (framework agreement) முழுமையாகச் செயல்படுத்துவதில் ரோமில் நடைபெறும் தொழில்நுட்பக் குழுக்கள் கவனம் செலுத்தும்” என்று குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
“முன்னோடி மண்டலச் செயல்முறையை விரிவாக்குவது, நிலுவையில் உள்ள அனைத்து எல்லைப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பது மற்றும் ஒரு விரிவான அமைதி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை நோக்கிய பணிகளை மேற்கொள்வது ஆகியவை இந்தப் பேச்சுவார்த்தையில் அடங்கும்” என்றும் கூறினார்.
ஹிஸ்புல்லா இயக்கம் ஆயுதங்களை முழுமையாகக் களைந்ததை உறுதிசெய்த பிறகு, “லெபனான் ராணுவம் தனது முழு நிலப்பரப்பின் மீதும் பயனுள்ள இறையாண்மை அதிகாரத்தை” மீட்டெடுப்பதற்கான ஒரு “வரிசைமுறைச் செயல்பாட்டை” இந்த ஒப்பந்தக் கட்டமைப்பு கோடிட்டுக் காட்டுகிறது.
அதற்குப் பிறகே, இஸ்ரேலால் லெபனானில் இருந்து “படிப்படியாகத் தனது படைகளை விலக்கிக் கொள்ள” முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலியப் படைகள் ஆரம்பகட்டமாக வெளியேறுவதற்காக இரண்டு “முன்னோடி மண்டலங்களையும்” (pilot zones) இந்த ஒப்பந்தம் வரைமுறைப்படுத்தியுள்ளது.




