மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ விமான நகர்வு அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்கா இராணுவ விமானங்களின் செயல்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராணுவத்தின் விமானப் போக்குவரத்தில் கணிசமான உயர்வு காணப்படுவதுடன், இதில் பெரும்பாலும் போக்குவரத்து
விமானங்கள் மற்றும் வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இடம்பெற்றுள்ளன.
விமானப் பயணங்களை கண்காணிக்கும் Flightradar24 செயலியின் தகவலின்படி, சனிக்கிழமையன்று ஐரோப்பா விலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அமெரிக்க இராணுவ விமானங்களின் எண்ணிக்கையில் அசாதாரணமான உயர்வு பதிவாகியுள்ளது.
அனுப்பப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை C-17A Globemaster III ரக இராணுவ சரக்கு விமானங்களாகும். இவ்விமானங்கள் ஒவ்வொன்றும் சுமார் 77 டொன் இராணுவ உபகரணங்களையும், 100 பணியாளர்களையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.
குறைந்தது 12 போக்குவரத்து விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், அவற்றில் சில ஜெர்மனிலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் Boeing KC-135 Stratotanker வகை வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களும் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் குறைந்தது நான்கு விமானங்கள் இஸ்ரேல் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இயங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்காவின் இந்த இராணுவ நகர்வு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.





