ரஷ்யாவிடம் சரணடைய உக்ரைனை தூண்டும் அமெரிக்கா – கல்லாஸ் குற்றச்சாட்டு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு முற்றிலும் சாதகமான நிபந்தனைகளின் அடிப்படையில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி கஜா கல்லாஸ் Kaja Kallas குற்றம் சாட்டியுள்ளார்.
நோர்வேயின் ஒஸ்லோவில் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளாக உக்ரைனைச் சரணடையத் தூண்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
வெள்ளை மாளிகையின் நிலைப்பாடுகள் ரஷ்யாவின் நலன்களுக்குச் சாதகமாகச் சாய்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய கல்லாஸ், இந்தச் சூழலைச் சமநிலைப்படுத்த பேச்சுவார்த்தை மேசையில் ஐரோப்பாவின் பங்களிப்பு அவசியமானது என்று வாதிட்டுள்ளார்.
“ரஷ்யா தனது உச்சகட்ட கோரிக்கைகளை முன்வைக்கும்போது, பேச்சுவார்த்தையைச் சமநிலைப்படுத்த நாமும் நமது வலுவான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ரஷ்யாவிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும் எனக் கூறிய அவர், அவர்கள் விரும்பும் விஷயங்கள் (தடைகளை நீக்குவது போன்றவை) குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஐரோப்பாவிற்கு மட்டுமே இருப்பதால், பேச்சுவார்த்தை மேசையில் ஐரோப்பாவின் பங்களிப்பு கட்டாயம் தேவை என்றார்.
“நாங்கள் எதையும் சும்மா விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஏனெனில், வெறும் அமைதி மட்டும் போதாது; அந்த அமைதி நீடித்ததாகவும், நீதியானதாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.




