பதற்றத்தை தணித்து அமைதி வழிக்கு திரும்ப அமெரிக்கா – ஈரான் இணக்கம்
கடந்த சில நாட்களாக நடந்த தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் தற்போது பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி தொடர் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன.
இந்நிலையில் தற்போது தாக்குதல்களை இடைநிறுத்தி அமைதி வழியை கடைப்பிடிக்க இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கப்பல்கள் இனி அந்த நீர்வழிப்பாதையில் “சுதந்திரமாக” செல்ல முடியும் என்று பெயர் வெளியிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஜலசந்தியில் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக வரும் செய்திகள் குறித்து ஈரான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஜூன் 17 அன்று, அமெரிக்காவும் ஈரானும் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. அதில், “அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதும் அடங்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, “வணிகக் கப்பல்கள் 60 நாட்களுக்குக் கட்டணமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்குத் தனது சிறந்த முயற்சிகளை” மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டிருந்தது.
ஆனால், இரு தரப்பினரும் மீண்டும் தாக்குதல் நடத்தியதால், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் சமீப நாட்களாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.



