பாதுகாப்பு சீரான பின்னரே ரோஹிங்கியா அகதிகள் மீட்பு: மியான்மர் நிபந்தனை
பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3,09,000 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதை மியான்மரின் இராணுவ ஆதரவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், ராகைன் மாநிலத்தில் பாதுகாப்புச் சூழல் மேம்பட்ட பின்னரே அவர்களை மீள அழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷினால் சமர்ப்பிக்கப்பட்ட 8,28,824 பெயர்கள் அடங்கிய பட்டியலில், ஜூலை 31 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 3,08,797 பேர் ராகைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மியான்மர் வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது.
017-ஆம் ஆண்டு மியான்மர் பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறைகளைத் தொடர்ந்து 7,00,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான பங்களாதேசுக்கு தப்பிச் சென்றதுடன், இன்னமும் பலர் ஆபத்தான கடல் மற்றும் தரைவழியாக வெளியேறி வருகின்றனர்.
பங்களாதேஷ் வழங்கிய பட்டியலில் உள்ளவர்களில் 4,241 பேர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,13,507 பேரின் விபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லையெனவும் மியான்மர் கூறியுள்ளது.
ராகைன் மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்து நிலையான சூழல் ஏற்படும் போது மட்டுமே அவர்களைத் திரும்பப் பெறும் செயல்முறை தொடங்கும் என மியான்மர் தெரிவித்துள்ளது.
ராகைன் பிராந்தியத்தில் அதிக சுயாட்சி கோரிப் போராடி வரும் ‘அரக்கான் படை’ (Arakan Army) என்ற இன ஆயுதக் குழுவிற்கு எதிராக மியான்மர் இராணுவம் சண்டையிட்டு வருகிறது.
இந்த மீளனுப்பும் நடவடிக்கை என்பது வங்கதேசத்துடனான முற்றிலும் இருதரப்பு சார்ந்த விவகாரம் என மியான்மர் வலியுறுத்தியுள்ளது.
2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆயத்தங்களைத் தாண்டி, ஒருவர் கூட தாயகம் திரும்பவில்லை என மியான்மர் சுட்டிக்காட்டியுள்ளது.
மலேசியாவிலிருந்து 5,00,000 ரோஹிங்கியா புகலிடக் கோரிக்கையாளர்களைத் திரும்பப் பெற மியான்மர் சம்மதித்த போதிலும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்குமாயின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என மலேசியா தெரிவித்துள்ளது.




