இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை: ஐ.நா வரவேற்பு
பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாகவே முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐ. நா. சபை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்ச் தனது எக்ஸ் (X) தளத்தில்,
“பாதுகாப்பான மற்றும் கண்ணியமான முறையில் தாயகம் திரும்புவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்கிறேன்.
இவர்கள் தாயகம் திரும்புவதற்கும் மறுவாழ்வு பெறுவதற்கும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) தொடர்ந்து உதவும்” எனப் பதிவிட்டுள்ளார்.
1983-இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து தமிழகத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாக வந்தனர்.
அதில் இதுவரை சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழக முகாம்களில் 58,000 பேரும், முகாம்களுக்கு வெளியே 34,000 பேரும் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு அனுமதிகளுக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2006 ஜூன் 1-ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டுச் சென்றவர்கள், தூதரகம் மூலம் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியவர்கள் மற்றும் கடுமையான குற்றவியல் வழக்குகள் இல்லாதவர்களுக்குத் தற்காலிகப் பயண ஆவணம் (Passport) வழங்கி இலங்கைக்கு வர வாய்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





