இரு பெண் எம்.பிக்கள் சங்கமம்: ஆஸ்திரேலியாவில் மலர்ந்தது புதிய கட்சி
ஆஸ்திரேலிய அரசியலில் அதிகரித்து வரும் பிரிவினைவாதக் கொள்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து புதிய நடுநிலை (Centrist) அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர்.
கன்பராவில் இன்று (25) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த ‘கம்யூனிட்டி ஸ்ட்ராங் ஆஸ்திரேலியா’ (Community Strong Australia) கட்சி, “பிரிவினைக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையையும், ஆத்திரத்திற்கு அப்பாற்பட்ட விவேகத்தையும்” கொள்கையாகக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கட்சிக்கு என்று தனியாக எந்தவொரு ‘தலைவரும்’ இருக்க மாட்டார் என்றும், நாடாளுமன்ற வாக்கெடுப்புகளின் போது உறுப்பினர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் தங்களின் சொந்த விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாலி ஸ்டெகால் (Zali Steggall) மற்றும் அலெக்ரா ஸ்பென்டர் (Allegra Spender) ஆகிய இருவரே இக்கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் ஆஸ்திரேலிய அரசியலில் சமூக தாராளமயக் கொள்கைகளையும், தீவிர காலநிலை மாற்றக் கட்டுப்பாடுகளையும் ஆதரிக்கும் ‘டீல்’ (Teal) எனப்படும் சுயேச்சை எம்பிக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தற்போது ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் இருகட்சி ஆட்சி முறைக்கு மாற்றாக, இந்த புதிய கட்சி ஒரு “மாற்று அரசியல் சக்தியாக” விளங்கும் என்று இந்த இருவரும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு மற்ற சில சுயேச்சை எம்பிக்கள் இதில் இணைய மறுத்துள்ள நிலையில், மேலும் இரண்டு ‘டீல்’ எம்பிக்கள் தங்களின் முடிவை ஆலோசித்து வருகின்றனர்.
இக்கட்சியினைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்திடம் (Australian Electoral Commission) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ பதிவு நடைமுறைகள் வரும் அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




