ஈரான் மீது நாளையே தாக்குதல் நடத்தப்படலாம்: ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான்மீது அமெரிக்கா நாளையே தாக்குதல் நடத்தக்கூடும் அல்லது தெஹ்ரானுடன் மிகப்பெரிய, சிறப்பான ஒப்பந்தமொன்றை எட்டக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பது குறித்து அவர் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான சாத்தியமான தாக்குதல் தொடர்பான தீர்மானம் எந்தக் கட்டத்தில் உள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். ஒருவேளை நாளையே அது நடைபெறலாம்” என்றார்.
மேலும், “நான் தாக்குதல் நடத்தப்போகிறேனா என்பதை உங்களிடம் கூறுவேன் என உண்மையிலேயே நினைக்கிறீர்களா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதன் மூலம் ஈரான் மேலதிக இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க முடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
“அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அந்த ஒப்பந்தத்தை அவர்கள் கடைப்பிடிப்பார்களா என்பதுதான் பிரச்சினை” என அவர் குறிப்பிட்டார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுப்பதே தனது முக்கிய நோக்கம் எனத் தெரிவித்த ட்ரம்ப், முன்னதாக B-2 குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கை மட்டும் நீண்டகாலத் தீர்வை உறுதிப்படுத்தப் போதுமானதாக இருக்காது என்றும் கூறினார்.
“அதை நிரந்தரமாக உறுதிப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் நான் இதனைச் செய்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில், ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். எனினும், இதற்கான புள்ளிவிவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
ஈரான் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உறுதியான தீர்மானத்தை அறிவிக்காத ட்ரம்ப், இராணுவத் தாக்குதலும் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தத்தை எட்டுவதும் சாத்தியமான தெரிவுகளாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“நான் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கலாம். அல்லது அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். ஆனால், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் வெற்றி எமக்குத்தான்” என அவர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமான அமெரிக்கா–இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் விரிவடைந்து பதற்றத்தை ஏற்படுத்தியது.
பின்னர் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதுடன், சமாதான ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவது தொடர்பிலும் இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்தப் போர் தொடர்பான பிரச்சினைகளுக்கு இதுவரை முழுமையான தீர்வு காணப்படவில்லை.




