சொந்த கட்சிக்குள்ளேயே ட்ரம்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலைகள் தீவிரமடைந்து வருகின்றன.
இதுவரை டிரம்பை எதிர்க்கத் தயங்கி வந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது ட்ரம்பின் முடிவுகளுக்கு எதிராகத் துணிச்சலாகப் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் சேர்ந்த குடியரசுக் கட்சியினரின் பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து டிரம்பின் அதிரடி முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன.
மேலும், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் ரஷ்யா மீது புதிய தடைகளை விதிப்பதற்குமான சட்டமூலத்தை பிரதிநிதிகள் சபை கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றி டிரம்பிற்கு அதிர்ச்சியளித்தது.
இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
“தேர்தல் நெருங்க நெருங்க, மக்கள் தங்களது தொகுதி வாக்காளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே வாக்களிப்பார்கள் என்பதைத்தான் நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள்,” என்று குடியரசுக் கட்சியின் மூத்த செனட்டர் Thom Tillis தெரிவித்துள்ளார்.
டிரம்பின் One Big Beautiful Bill திட்டத்தை எதிர்த்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அவர் தனது செனட் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், ஜனநாயகக் கட்சியினர் இந்த உள்முக எதிர்ப்பை ஒரு பெரிய விடயமாகக் கருதவில்லை. முக்கியப் பிரச்சினைகளில் குடியரசுக் கட்சி ஒட்டுமொத்தமாக டிரம்பை எதிர்க்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
“டிரம்பை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே அவரால் ஓரங்கட்டப்பட்டவர்கள் மட்டுமே.
இது உண்மையில் கட்சி மீது டிரம்பிற்கு இருக்கும் முழுமையான கட்டுப்பாட்டையே காட்டுகிறது” என்று டிரம்ப் ஆதரவு திட்டங்களை சில நேரங்களில் ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜான் ஃபெட்டர்மேன் (John Fetterman) சுட்டிக்காட்டியுள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், குடியரசுக் கட்சியினரின் இந்த எதிர்ப்பை “தேர்தல் ஆண்டு அரசியல்” என்று தட்டிப்பழித்துள்ளார்.
“ஒவ்வொரு பிரச்சினையிலும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்கான அரசியல் இழப்பை ஏற்கத் தயாராக இருக்க மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் (Abigail Jackson) இதுகுறித்துக் கூறுகையில், “ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியினரும் இல்லாத ஒரு பிளவை உருவாக்க முயல்கிறார்கள்.
டிரம்பின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்துடன் கொண்டுள்ள நெருங்கிய உறவைத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்றார்.




