நீண்டகாலப் பகைமைக்கு முடிவு: குர்திஷ் தளபதிக்கு சிரிய அரசில் முக்கிய பொறுப்பு
சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார்.
பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் எதிரிகளாக இருந்த இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இணக்கத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது.
தசாப்தத்திற்கும் மேலாக, மஸ்லூம் அப்தி (Mazloum Abdi) குர்திஷ் தலைமையிலான “சிரிய ஜனநாயகப் படைகளை” (SDF) வழிநடத்தினார்.
உள்நாட்டுப் போரின் போது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட அமெரிக்காவுடன் இணைந்த இந்தப் படை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்றி தன்னாட்சி மண்டலத்தை உருவாக்கியது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில், அகமது அல்-ஷரா தலைமையிலான கிளர்ச்சிக் கூட்டணியால் முன்னாள் ஜனாதிபர் பாஷர் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, SDF வசமிருந்த பகுதிகள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என சிரியாவின் புதிய இஸ்லாமிய அரசு வலியுறுத்தியது.
இந்த இணைப்புச் செயல்முறை ஒரு வருடத்திற்கும் மேலாகத் தாமதமடைந்தது. எனினும், கடந்த ஜனவரியில் அப்தியின் படையினருக்கு எதிராக சிரிய அரச படைகள் நடத்திய தீவிரத் தாக்குதலைத் தொடர்ந்து, SDF அமைப்பை டமாஸ்கஸ் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து, SDF அமைப்பு முறைப்படி கலைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்த அப்தி, “புதிய சிரியாவின் அமைதி மற்றும் அமைப்பில் பங்கேற்கும்” புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக வரவேற்புத் தெரிவித்தார்.
அவரது இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி ஷரா வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் பதவி வெறும் பெயரளவிலானதா என்பது குறித்துத் தெளிவுபடுத்தப்படவில்லை.




