இந்துக்களின் புனித தினம் அவமதிப்பு – சுவிஸ் பிரஜைக்கு சிறை
இந்தோனேசியாவிற்கு சுற்றுலாச் சென்ற சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஒரு நீதிமன்றம், பாலினீசிய இந்துக்களின் புனிதமான அனுசரிப்பை அவமதித்ததற்காக, இன்று ஓராண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தெரியவருகிறது.
26 வயதான லூசியன் ஆண்ட்ரின் ஸ்க்ராகன் Luzian Andrin Zgraggen, என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டிலேயே தங்கி, அமைதியாக இருந்து தியானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படும் ‘மௌன நாள்’ குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் பதிவிட்டதன் மூலம், இந்தோனேசியாவின் புதிய குற்றவியல் சட்டத்தை மீறியுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் தங்கியிருந்த வில்லாவின் ஊழியர்கள் கட்டுப்பாடுகள் குறித்து அவருக்குத் தெரிவித்த பின்னரும் கூட, அவர் அந்தச் செய்திகளைப் பதிவிட்டதாக நீதிமன்றம் கண்டறித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் செய்த செயல் பாலினீசிய மக்களைப் புண்படுத்தியது, அவர்களின் நம்பிக்கையைக் காயப்படுத்தியது மற்றும் பொதுமக்களிடையே சீற்றத்தைத் தூண்டியது,” என்று தலைமை நீதிபதி ஜோகோர்டா புத்ரா புடி பாஸ்டிமா Tjokorda Putra Budi Pastima கூறியதுடன், அவர் தனது குற்றத்தை பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் ‘மௌன நாள்’, என்பதை உள்ளுர் மக்கள் ‘நியேபி’ என்று அழைக்கிறார்கள். இந்த நாளில் நாள் முழுவதும் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்கிறார்கள். இதன்போது சிறப்பு ரோந்துப் படையினரைத் தவிர, அந்தத் தீவின் உலகப் புகழ்பெற்ற கடற்கரைகளும் தெருக்களும் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.





