மத்திய கிழக்குக்கு விரைந்த அமெரிக்க போர்க்கப்பல்: சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரின்போது மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் காணப்பட்ட மோசமான நிலைமைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானந்தாங்கிப் போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சென்றடைந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிடப்பட்ட பணியின் ஒரு பகுதியாக ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்’ (USS George Washington) விமானந்தாங்கிப் போர்க்கப்பல் அரபிக் கடலை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது மேலை பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் எதுவும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
பணியிலிருந்த ‘யுஎஸ்எஸ் லிங்கன்’ (USS Lincoln) போர்க்கப்பல் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்ப அழைக்கப்படும் என கடற்படை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
கடந்த நவம்பர் மாதம் சான் டியகோவிலிருந்து புறப்பட்ட இக்கப்பல், வெனிசுலா கடற்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதை அடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
துறைமுகங்களில் எங்கும் நிறுத்தப்படாமல் மிக நீண்ட காலம் கடலில் தொடர்ச்சியாகப் பணியிலிருந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பல் என்ற சாதனையை இது பதிவு செய்துள்ளது.
எனினும், இக்கப்பலில் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும், பராமரிப்புப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
மேலும், கப்பலிலிருந்த சுமார் 5,000 கடற்படை வீரர்களின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
போர் நடவடிக்கை தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் தவறான திட்டமிடலையே இந்நிகழ்வு வெளிப்படுத்துவதாக ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடையும் நிலையிலும், தெளிவான முடிவுகள் எதுவுமின்றிப் போர் நீடித்து வருகிறது.
அண்மைக்காலமாகப் போர்ப் பதற்றம் சற்றுத் தணிந்துள்ள போதிலும், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதாக ஈரான் சபதம் செய்துள்ளது.
அதேவேளை, அப்பகுதியில் கடல்வழிப் போக்குவரத்தை அதிகரிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை காலவரையின்றித் தொடர முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ‘யுஎஸ்எஸ் லிங்கன்’ கப்பலில் நிலவும் சூழல் குறித்த செய்திகளை டிரம்ப் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவை யுத்த காலத்தில் ஏற்படக்கூடிய இயல்பான சிரமங்களே எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கை (MoU) முடிவுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.
அதேவேளை, ஈரானுக்கு எதிராக ‘முடக்கும் பொருளாதார நடவடிக்கை’ (crushing economic operation) ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்துக்கொள்ளும் எந்தவொரு நாடும் கடுமையான பொருளாதாரப் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், இது ஒரு ‘பொருளாதார டி-டே’ (economic D-Day) என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஒரு திசைதிருப்பல் நாடகம் என்றும், இத்தகைய அணுகுமுறை அமெரிக்காவிற்கு மேலும் தோல்வியையே தரும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி பதிலளித்துள்ளார்.





