FIFA தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.
உலகக் கால்பந்தாட்டத்தின் முக்கிய பிராந்தியக் கூட்டமைப்புகள் இது பற்றி ஆராய்ந்துவருகின்றன என்று மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (UEFA), ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (AFC) , வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CONCACAF) ஆகிய முக்கிய அமைப்புகளே இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருகின்றன.
உலகக் கோப்பை போட்டிகள் உள்ளிட்ட FIFA வின் முக்கிய நிகழ்வுகளில் தனியார் முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை விற்பனை செய்யும் இன்பான்டினோவின் முன்மொழிவுக்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
“அவருக்கு வேறு வழியில்லை. ஒன்று அவர் சமாதான முறையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடாமல் விலக வேண்டும், அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எனும் கடினமான பாதையை எதிர்கொள்ள வேண்டும்” என இது குறித்துப் பேசுகையில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




