திரைக்கதை மன்னரின் இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை
மறைந்த தமிழ்த் திரையுலகின் ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான அளப்பரிய பங்களிப்பைப் போற்றி, அவரது இறுதிப் பயணத்திற்கு அரச மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
“தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கே.பாக்யராஜ். அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும்.” என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கே.பாக்யராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்” என முதல்வர் விஜய் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திரைத்துறையில் கே.பாக்யராஜ் ஆற்றிய மாபெரும் தொண்டினைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் முழு அரச மரியாதையுடன் (State Honours) நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.




