‘ஹிட்லர்போல் ரகசிய ராணுவ குழுக்களை வைத்திருந்த இலங்கை ஆட்சியாளர்கள்’
“அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்களே சுரேஷ் சலேயின் கைதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறுகின்றனர். இது சட்டப்பூர்வமான ஒரு கைதாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
“இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்” எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு:
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டுகின்றன. சுரேஷ் சலே ஊடாக பழிவாங்கல் வேட்டை நடப்பதாகவும் கூறிவருகின்றன.
சுரேஷ் சலே சட்டப்பூர்வமாகவே கைது செய்யப்பட்டார். அவரை சட்டத்தின் பிரகாரமே தடுத்து வைத்துள்ளோம். விசாரணையும் சட்டப்பூர்வமாகவே இடம்பெறுகின்றது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் சுரேஷ் சலேயின் மனைவி, பிள்ளைகளை சிலர் தூண்டிவிட்டுள்ளனர். சலேயும் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.
அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி, மீண்டெழ முற்படுகின்றனர். ஆனால், அவர்களின் முயற்சி கைகூடவில்லை.
தான் குற்றம் இழைக்கவில்லை எனில் சுரேஷ் சலே, விசாரணைக்கு ஒத்துழைத்து, அதனை நிரூபித்து விடுதலையாகலாம். ஆனால், எதிரணியினர் சுரேஷ் சலேவுக்கும் கயிறு கொடுத்துள்ளனர் (ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்).
மஹிந்த ஆட்சியில் சரத் பொன்சேகாவுக்கு நடந்ததுதான் உண்மையான அரசியல் பழிவாங்கலாகும்” என்றார்.




