பெல்ஜியம் கோல் வேட்டை: வெளியேறியது நியூசிலாந்து
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் (Group G) பிரிவில் பரபரப்பான ஆட்டத்தில், மாற்று வீரராக களம் புகுந்த ரொமேலு லுகாகு (Romelu Lukaku) கடைசி நிமிடங்களில் அடித்த ஹெடர் கோல் மூலம் பெல்ஜியம் அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்து அணி இத்தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
வான்கூவரில் உள்ள BC Place Vancouver) மைதானத்தில் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
போட்டியின் 28-வது நிமிடத்தில், இடது பக்கத்திலிருந்து வந்த கார்னர் கிக் பந்தை நியூசிலாந்து வீரர்கள் சரியாகத் தடுக்கத் தவறியதால், லியாண்ட்ரோ ட்ரோசார்ட் (Leandro Trossard) பந்தை கோல் கம்பத்திற்குள் தள்ளி பெல்ஜியம் அணிக்கு முதல் கோலை பெற்றுத் தந்தார்.
இரண்டாவது பாதியிலும் ‘ரெட் டெவில்ஸ்’ (Red Devils – பெல்ஜியம் அணி) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டம் மீண்டும் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே ட்ரோசார்ட் தனது இரண்டாவது கோலை அடித்தார்.
அவரது முதல் முயற்சி தடுக்கப்பட்டாலும், மீண்டும் வந்த பந்தை மிக வேகமாக கோலாக மாற்றினார்.
போட்டியின் 66-வது நிமிடத்தில், கெவின் டி புரூய்னே (Kevin De Bruyne) பெனால்டி பகுதிக்கு வெளியிலிருந்து அடித்த ஒரு அருமையான லோ ஸ்ட்ரைக் (low strike) மூலம் கோல் அடித்தார்.
இதன் மூலம் 34 ஆண்டுகள் 363 நாட்கள் வயதான டி புரூய்னே, உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்காக கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
பெல்ஜியத்தின் கோல்கீப்பர் திபாத் கோர்டோயிஸ் (Thibaut Courtois), தனது 18-வது உலகக் கோப்பை போட்டியில் விளையாடியதன் மூலம், என்சோ சிஃபோவின் (Enzo Scifo) சாதனையை முறியடித்து, உலகக் கோப்பையில் பெல்ஜியம் சார்பாக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஆட்டம் முடிய ஆறு நிமிடங்கள் இருந்தபோது, நியூசிலாந்து அணியின் எலிஜா ஜஸ்ட் (Elijah Just) ஒரு சிறப்பான கோல் அடித்து தங்கள் அணியின் கணக்கைத் தொடங்கினார்.
ஆனால், அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே பெல்ஜியத்தின் லுகாகு பாய்ந்து சென்று ஒரு கோல் அடித்து, கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் தனது அணியை குரூப் ‘ஜி’ பிரிவில் முதலிடத்திற்கு உயர்த்தினார்.
அதைத்தொடர்ந்து, கூடுதல் நேரத்தில் (90+4 வது நிமிடம்) அலெக்சிஸ் சேலேமேக்கர்ஸ் (Alexis Saelemaekers) ஐந்தாவது கோலை அடித்தார்.
இறுதியில் பெல்ஜியம் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பெல்ஜியம் அணி, ஜூலை 1 அன்று சியாட்டிலில் (Seattle) நடைபெறும் ‘ரவுண்ட் ஆஃப் 32’ (Round of 32) சுற்றில் குரூப் A, E, H, I அல்லது J பிரிவில் 3-வது இடம் பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும்.




