இலங்கை செய்தி

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக வியூகம் வகுக்கும் இலங்கை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தடைகளை நீக்கி, இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை இணைத்து விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது.

இதன்கீழ் தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களை இணைத்து, சிங்கராஜ, கன்னெலிய,தெதியகல, நாகியாதெனிய வனப்பகுதி மற்றும் ஹினிதும மலைத்தொடர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட விசேட சுற்றுலா வலயம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

தற்பொழுது அந்த வலயத்திற்குள் முறையற்ற விதத்தில் நிர்மாணிக்கப்படும் ஹோட்டல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, அதன் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குமுறை கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த வலயத்திற்குள் தேயிலை பயிர்ச்செய்கை சார்ந்த சுற்றுலாத் தொழில் மற்றும் சூழல் சார்ந்த சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய கூட்டுச் செயல்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கடல்சார் சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகளின் கீழ், Capital Marine and Civil Construction (CMC) நிறுவனத்தினால் 10 வருட காலப்பகுதியில் 03 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள கடல்சார் சுற்றுலா வழித்தடம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன் முதற்கட்டமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பயணிகள் படகுச் சேவைகளை (Ferry services) ஆரம்பித்து, பின்னர் அதனை கொழும்பு மற்றும் காலி வரை விரிவுபடுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

சினிமா சுற்றுலாத்துறையை (Film Tourism) மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டுத் திரைப்படக் குழுவினர் இலங்கைக்குள் படப்பிடிப்புகளை நடத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதில் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதுடன், ஒரே இடத்தில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ‘ஒற்றைச் சாளர’ (Single Window) முறையைச் செயல்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

திரைப்பட உபகரணங்களை தற்காலிகமாக நாட்டிற்குள் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

விமானப்படை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் சுற்றுலாச் சபை ஆகியன இணைந்த கூட்டுத் திட்டத்தின் மூலம், கொக்கல விமான நிலையத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட வான்வழி சாகச விளையாட்டை (Skydiving) மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்களைப் பார்வையிடுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதுடன், அந்தத் துறையை முறைப்படுத்துவதற்கும் இணையவழிப் பதிவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இக்கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

கொழும்பு நகரின் இரவு நேர சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், மரைன் டிரைவ் பகுதியில் வார இறுதியில் நடத்தப்படும் Marine Night நிகழ்ச்சித் திட்டம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விசா மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை