வெப்ப அலை: ஸ்பெயினில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
ஐரோப்பாவை வாட்டி வதைத்த கடுமையான வெப்ப அலையினால் ஸ்பெயினில் 1,000 இற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான முதல் ஆறு மாதங்களை அந்நாடு எதிர்கொண்டுள்ளது.
இந்த வெப்ப அலையின் போது, வெப்பம் சார்ந்த உடல்நலப் பாதிப்புகளால் குறைந்தது 1,028 பேர் உயிரிழந்துள்ளதாக பொது Carlos III சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய வானிலை முகவாண்மையான ஏமெட் (Aemet) அமைப்பின் கூற்றுப்படி, ஸ்பெயினில் மிக வெப்பமான ஜூன் மாதமாக கருதப்பட்ட 2025 ஜூன் மாதத்தில், வெப்பத்தால் 407 மரணங்கள் பதிவாகியிருந்தன.
ஆனால், தற்போதைய இறப்பு எண்ணிக்கை அதனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவைச் சுட்டெரித்த இந்த வெப்ப அலை, ஐரோப்பாவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் கடுமையானதாகும்.
ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அத்துடன் பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்திலும் ஜூன் மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாடும் முன்னெப்போதும் இல்லாத சராசரி வெப்பநிலையை எதிர்கொண்டதுடன், அந்நாடு தனது வரலாற்றிலேயே மிக அதிகப்படியான இரவு நேர வெப்பநிலையை இந்த அலையின் போது எதிர்கொண்டுள்ளது.




