வளிமண்டலத்தில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்தும் சூரிய புயல்கள்
சூரியப் புயல்கள் இன்னும் சில நாட்களுக்குள் பூமியின் வளிமண்டலத்தில் விரைவான மற்றும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என ’புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஜோக்கிம் ரேடரின் (Joachim Raeder) ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ (Geophysical Research Letters) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி சூரியன் தற்போது அதன் 11 ஆண்டு செயல்பாட்டுச் சுழற்சியின் உச்சத்தில் உள்ள உள்ளதாகவும், இது உலகளாவிய காலநிலை மற்றும் வானிலையைப் பாதிக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
67 ஆண்டுகால தரவுகளின் பகுப்பாய்வு படி சூரியப் புயல்களுக்குப் பிறகு ராக்கி மலைகள் மற்றும் ஹட்சன் விரிகுடா போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியப் பிழம்புகளிலிருந்து வரும் கதிர்வீச்சு துருவச் சுழல் வழியாக வளிமண்டலத்திற்குள் ஊடுருவுகிறது என்றும், சூரியப் புயல்கள் காற்று அழுத்தம், மழைப்பொழிவு மற்றும் உள்ளூர் வெப்பநிலை போன்ற வளிமண்டல அம்சங்களை மாற்றக்கூடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




