அமெரிக்காவில் அதிர்ச்சி: தீக்கிரையான வீட்டில் துப்பாக்கிக் காயங்களுடன் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
மிச்சிகன் ஏரியின் கிழக்குக் கரையில் உள்ள ‘கிராண்ட் ஹேவன் டவுன்ஷிப்’ (Grand Haven Township) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் நண்பகல் 12 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்து 8 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஓட்டாவா கவுண்டி பொலிஸ் பிரிவின் கப்டன் ஜேக்கப் ஸ்பார்க்ஸ் (Jacob Sparks) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் இதுவரை முழுமையாக அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ஸ்பார்க்ஸ் கூறினார்.
உயிரிழந்த சிறுவர்களின் வயது 5 முதல் 15 வரை இருக்கும் என அவர் தெரிவித்தார்.
எனினும், எத்தனை பேரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.
“இது ஒரு சிக்கலான மற்றும் நுணுக்கமான விசாரணைத் தேவைகளைக் கொண்ட சம்பவ இடமாகும்” என்று ஸ்பார்க்ஸ் குறிப்பிட்டார்.
இந்தத் தீ விபத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளதாகவும், இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ எனக் நம்புவதற்குப் போதிய காரணங்கள் உள்ளதாகவும் ஸ்பார்க்ஸ் கூறினார். மிச்சிகன் மாநில பொலிஸ் பிரிவின் தீ வைப்புச் சம்பவ விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.
கிராண்ட் ஹேவன் டவுன்ஷிப் பகுதி சுமார் 18,000 மக்கள் தொகையைக் கொண்டதுடன், ‘கிராண்ட் ராபிட்ஸ்’ (Grand Rapids) நகரிலிருந்து மேற்கே 25 மைல் தொலைவில் அமைந்துள்ளது.




