பொறுப்புக் கூறலில் NPP அரசு ஆமை வேகம்: சாணக்கியன் சீற்றம்
“பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாகச் செயற்பட்டிருந்தால், நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்களுக்கு இன்று கூட்டங்களை நடத்த வெளியில் இருந்திருக்கமாட்டார்கள்.
அவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதிமொழிகள் குறித்து இதுவரை தெளிவான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்,
“உள்நாட்டுப் பொறிமுறைதான் வேண்டும் எனக் கூறும் அரசாங்கம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை (OMP) முன்னிறுத்தி நீதி வழங்கப்படும் எனக் குறிப்பிடுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை முற்றாக நிராகரிக்கின்றனர்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று மாநாடொன்றை நடத்தி, அவர்கள் தமது தெளிவான நிலப்பாட்டை அறிவித்துவிட்டனர்.
தற்போது நாமலின் கைது குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால் நாமலின் கைதைவிட எமக்கு எமது மக்களின் பிரச்சினைகளே முதன்மையானவை. நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதை நாம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகப் பார்க்கவில்லை.
அவர் ஊழல் அல்லது கொள்ளையில் ஈடுபட்டிருந்தால், அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுக்கொடுங்கள். அதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளை நாம் வரவேற்கின்றோம். அதேபோன்று, பொறுப்புக்கூறல் உட்பட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எனினும், அத்தகைய தீர்வை நோக்கி அரசாங்கம் பயணிக்கவில்லை. இரு ஆண்டுகள் கடந்திருந்தாலும், தவறுகளைத் திருத்திக் கொள்ள இன்னும் வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழ் மக்களின் விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.




