மானியம் பெற போலி திருமணங்கள்: விசாரணை முன்னெடுப்பு
உத்தர பிரதேசத்தில் அரசு மானியம் பெறுவதற்காக போலி திருமணங்கள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 194 விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச அரசு பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பங்களின் மகள்களின் திருமணத்துக்காக ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இதற்காக, போலி திருமணங்கள், உ.பி.யின் மைன்புரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன.
தேவ்புராவைச் சேர்ந்த ராகேஷ் என்பவரது விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த திருமண அட்டை போலியானது எனக் கண்டறியப்பட்டது. உயர் அதிகாரிகளின் விசாரணையில், அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்ததும், அவர் மோசடியான வழிகளில் மானியத்தைப் பெற முயன்றதும் தெரியவந்தது.
இதேபோல், பர்னஹாலைச் சேர்ந்த அசோக் குமார் மானியத்துக்காக ஒரு போலி வருமானச் சான்றிதழை சமர்ப்பித்திருந்தார். மொஹல்லா பக்வானைச் சேர்ந்த அப்சானா மற்றும் தலிப்பூரைச் சேர்ந்த ஷகீலா பேகம் ஆகியோர் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், தவறான மானிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
உ.பி. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை புள்ளிவிவரப்படி, இந்த ஆண்டு திருமண மானிய திட்டத்தில் 909 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இ்தில் செப்டம்பர் வரை, 552 பேருக்கு ரூ.1.10 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இதில் மணமகள் அல்லது மணமகன் இல்லாமல் போலியான திருமண ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. மூன்று கட்ட சரிபார்ப்புகளுக்குப் பிறகு, சுமார் 194 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த விண்ணப்பதாரர்களில் பலர் போலியான திருமண அட்டைகளையும், தவறான வருமானச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளனர். தற்போது 125 விண்ணப்பங்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ளன. இவர்களில் 194 பேர் செய்த மோசடிகள் பலவகைகளாக உள்ளன.




