செம்மணி புதைகுழி: இடைக்கால அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் பிரதிகளைப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், வழக்கோடு தொடர்புடைய ஏனைய உரிய தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இரண்டு விசேட விண்ணப்பங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதில், ஏற்கனவே செம்மணி வழக்கு தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலுள்ள சோமரத்ன ராஜபக்ஷவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அவரிடமிருந்து வாய்மொழி மூலமான முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், ‘சி-40’ கார்பன் பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்புவதற்கும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிமன்றம், சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாய்மொழி வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கியது.
அதேநேரம், ‘சி-40’ கார்பன் பரிசோதனை தொடர்பான கோரிக்கை குறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தோண்டியெடுக்கப்பட்ட எலும்புகளைப் பரிசோதிப்பதற்கான நிபுணர் குழுவின் விவரங்கள் எதிர்வரும் வாரம் மன்றில் தாக்கல் செய்யப்படும் என்றும், அதன் பின்னரே விரிவான ஆய்வுகள் தொடங்கும் என்றும் சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 2026 நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.




