யாழில் விபத்து: வயோதிபப் பெண் பலி – இருவர் காயம்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டிப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் ஓட்டோவும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமையுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன், அதே திசையில் பயணித்த ஓட்டோ மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




