டெல்லியில் 11 ஆம் திகதி மோடி, புடின் சந்திப்பு
டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் நான்காவது முறையாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் இடையே, செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி புடின், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புச் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் கால் பங்கிற்கும் அதிகமான பங்கையும், உலக மக்கள் தொகையில் பாதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானியஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் ஏனைய உலகத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இம்மாநாட்டின் இடையே வருகை தரும் அனைத்துத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சீன அதிபருடனான இவரது சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எல்லைச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உட்பட இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய இச்சந்திப்பு இரு தலைவர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பை வழங்கும்.
இதனிடையே, பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் தற்போதைய தலைவர் என்ற அடிப்படையில், பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும் இந்த உச்சிமாநாட்டின் வெளிக்கள அமர்வுகளில் (outreach sessions) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு டாக்கா கோரி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக இம்மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.




