ஸ்பெயினில் கோர ரயில் விபத்து: விசாரணை தீவிரம் – பதவி விலகுவாரா துறைசார் அமைச்சர்?
ஐரோப்பாவில் 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தாகக் கருதப்படும் சம்பவத்திற்கான காரணம் குறித்து, தனியார் ரயில் நிறுவனமும் ஸ்பெயின் அரசாங்கமும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயினின் டோலிடோ பிராந்தியத்தில் புதன்கிழமை காலை உள்ளூர் நேரப்படி இரு அதிவேக ரயில்கள் மோதியதில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அரசுக்குச் சொந்தமான RENFE நிறுவனத்தால் இயக்கப்பட்ட ரயில், தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் நிறுவனமான Iryo இயக்கிய மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதியுள்ளது.
ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே தெரிவிக்கையில், புதன்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில், 63 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதையில் சமிக்ஞை கட்டமைப்பில் கணினிக் கோளாறு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக, அந்தப் பாதையில் பயணித்த அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ரயிலை மீண்டும் இயக்குவதில் முரண்பட்ட தகவல்கள்
ஸ்பெயினின் El Mundo நாளிதழின் தகவலின்படி, சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுக்குப் பின்னர், அரசுக்குச் சொந்தமான கட்டுப்பாட்டு மையம் ரயிலின் கட்டமைப்பை மீளமைக்குமாறு அறிவுறுத்தியதால், தனியார் நிறுவனமான Iryo இயக்கிய ரயில் தனது பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவில்லை.
ரயிலின் கட்டமைப்பை மீளமைக்கும் நடவடிக்கைக்கு “பல நிமிடங்கள்” தேவைப்படும் என்பதால், பயணத்தைத் தொடர்வதற்கு Iryo நிறுவனத்திற்கு “அனுமதி வழங்கப்படவில்லை” என அந்நிறுவனத்தின் நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த வட்டாரங்கள் El Mundo நாளிதழிடம் தெரிவித்துள்ளன.
எனினும், சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ஆறு ரயில்களில் சிலவற்றை மீண்டும் இயக்குமாறு உத்தரவிடப்பட்டதாக அமைச்சர் புவென்டே தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்தவொரு உத்தரவும் தமக்குக் கிடைக்கவில்லை என Iryo நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமது ரயில் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் El Mundo செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அரசுக்குச் சொந்தமான RENFE ரயிலை வழக்கமான வேகத்தில் மீண்டும் பயணத்தைத் தொடருமாறு கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த Iryo ரயிலின் பின்புறத்தில் RENFE ரயில் மோதியுள்ளது.
நிறுத்த சமிக்ஞை செயற்பாட்டில் இருந்ததாக அமைச்சர் தெரிவிப்பு
RENFE ரயில் மணிக்கு 200 கிலோமீற்றர் வேகம் வரை பயணிக்கக்கூடியது. மோதல் இடம்பெற்ற தருணத்தில் அந்த ரயில் எத்தகைய வேகத்தில் பயணித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட ரயில் பாதையில் நிறுத்துமாறு அறிவுறுத்தும் சமிக்ஞை செயற்பாட்டில் இருந்ததால், RENFE ரயிலை மீண்டும் இயக்குமாறு ஒருபோதும் உத்தரவிட்டிருக்கக் கூடாது என அமைச்சர் புவென்டே தெரிவித்துள்ளார்.
“அந்தக் கட்டமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பாத நிலையில், ரயில் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானம் கட்டுப்பாட்டு மையத்திற்குரியது. எமது பார்வையில் விளக்கமளிக்க முடியாத சூழ்நிலையில், போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க அந்த மையம் தீர்மானித்துள்ளது” என அவர் கூறினார்.
ஸ்பெயினில் ரயில் சாரதிகளுக்கும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணையில் அந்தப் பதிவுகள் முக்கிய ஆதாரங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ரயிலுக்கு என்ன சமிக்ஞை வழங்கப்பட்டது, எந்த நேரத்தில் வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை.
மாற்றியமைக்கப்பட்டு வரும் சமிக்ஞை கட்டமைப்பு
இந்த விபத்து இடம்பெற்ற மட்ரிட்–செவில்லா அதிவேக ரயில் பாதையில், Linienzugbeeinflussung (LZB) எனப்படும் சமிக்ஞை கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கட்டமைப்பு ரயில்களின் வேகத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுடன், அனுமதிக்கப்பட்ட வேக வரம்புகள் மீறப்படும்போது தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் திறனையும் கொண்டுள்ளது.
புதன்கிழமை இந்தப் பாதுகாப்புக் கட்டமைப்பு செயலிழந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட பாதையில் பயணித்த எட்டு ரயில்களும் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன. இதையடுத்து, கட்டுப்பாட்டு மையங்கள் கைமுறை இயக்க முறைக்கு மாறின.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்கள், தற்போதைய தகவல்களின் அடிப்படையில், LZB கட்டமைப்பு செயலிழந்ததால் நேரடியாக ஏற்பட்டவை அல்ல என்றும், மனிதத் தவறுகளுடன் தொடர்புடையவை என்றும் கருதப்படுகின்றன.
எனினும், ஐரோப்பா முழுவதும் LZB கட்டமைப்புக்குப் பதிலாக, நவீன ஐரோப்பிய ரயில் போக்குவரத்து மேலாண்மைக் கட்டமைப்பான ERTMS படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
2050ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பியக் கண்டம் முழுவதும் ரயில் சமிக்ஞை முறைகளைத் தரப்படுத்துவதன் மூலம், ரயில்களின் வேகம், உட்கட்டமைப்பின் கொள்ளளவு மற்றும் ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
விபத்து இடம்பெற்ற ரயில் பாதையில், LZB கட்டமைப்பிலிருந்து ERTMS கட்டமைப்புக்கு மாற்றும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பெயினின் CSIF தொழிற்சங்கம், போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே பதவி விலக வேண்டும் எனக் கோரியுள்ளது.
சமூக வலைத்தளமான X இல் வெளியிட்ட பதிவில், விசாரணைக்கு மதிப்பளிக்குமாறும், Adif நிறுவனத்தின் ரயில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரியின் குற்றமற்றவர் என்ற முன்கணிப்பைப் பேணுமாறும் அரசாங்கத்திடம் கோருவதாகத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், “கடினமாக உழைக்கும் ஒருவரை வெட்கமின்றிப் பலிகடாவாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அமைச்சர் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனவும் அந்தத் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், தெற்கு ஸ்பெயினின் ஆதமுஸ் கிராமத்திற்கு வெளியே இரு அதிவேக ரயில்கள் மோதியதில் 46 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முற்பகுதியிலும் CSIF தொழிற்சங்கம் கவலைகளை வெளியிட்டிருந்தது.
ரயில் விபத்தில் உயிர் தப்பியவர்கள் அதிர்ச்சித் தகவல்கள்
ஐரோப்பாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப்பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துக்குப் பின்னர், மத்திய ஸ்பெயினின் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.
2013ஆம் ஆண்டு வடமேற்கு ஸ்பெயினின் சாண்டியாகோ டி கொம்போஸ்டெலா நகருக்கு வெளியே வளைவான தண்டவாளப் பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 80 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஸ்பெயினில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தாக இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
ஜனவரி மாதம் ஆதமுஸ் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தும், புதன்கிழமை விபத்து நிகழ்ந்த அதே மட்ரிட்–செவில்லா அதிவேக ரயில் பாதையிலேயே இடம்பெற்றது.
இரண்டு அதிவேக ரயில் மோதல் சம்பவங்கள் சில மாத இடைவெளியில் இடம்பெறுவது “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் ஸ்பெயினின் அதிவேக ரயில் வலையமைப்பில் பெருமளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய அதிவேக ரயில் வலையமைப்பைக் கொண்ட நாடாக ஸ்பெயின் திகழ்கிறது. இந்த வலையமைப்பு அந்நாட்டின் தேசியப் பெருமையின் அடையாளமாகவும் விளங்குகிறது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில், சுமார் 2.6 கோடி பயணிகள் ஸ்பெயினின் அதிவேக ரயில் வலையமைப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.




