நியூசிலாந்தில் மின் துண்டிப்பு : 200 விமானங்கள் இரத்து
நியூசிலாந்தை இன்று கடுமையான புயல் தாக்கியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
சுமார் 4,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெலிங்டன் மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெலிங்டனுக்கு வடகிழக்கில் உள்ள லோயர் ஹட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவும் பதிவாகியுள்ளது.
அதேநேரம் காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை வீசியதாகவும், இரவு நேரத்தில் மணிக்கு 150 கி.மீற்றர் வேகத்தில் வீசியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற வானிலை காரணமாக வெலிங்டன் விமான நிலையத்தில் சுமார் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





