தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் 2026 இல் மின் உற்பத்தி 50 வீதத்தால் வீழ்ச்சியடையும் – சுஜீவ
தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் 2026 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி 50 வீதத்தால் வீழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான காரியாலயத்தில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள போதிலும், அமைச்சர்களுடைய வங்கி கணக்குகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 30 சதவீதத்தை மாத்திரமே செலவிட்டுள்ளமை, அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகின்றது.
நிலக்கரி மோசடி காரணமாக எரிசக்தி துறையில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தி திறன் குறைந்துள்ளதுடன் உரிய நேரத்தில் நிலக்கரியைக் கொண்டுவரத் தவறியதால் இந்த ஆண்டு மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும்.
இதனால் மீதமுள்ள தேவையை நிவர்த்தி செய்ய அதிக செலவுமிக்க டீசல் மின்சாரத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர் மின்சாரத்திற்கு ஒரு அலகிற்கு 3 ரூபாயும், நிலக்கரிக்கு 23 ரூபாயும் செலவாகும் நிலையில், டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க 80 ரூபா வரை செலவிடப்படுகிறது.
இவ்வாறான நட்டத்தின் பின்னணியிலும் டீசல் இறக்குமதியில் பாரிய ஊழல்கள் இடம்பெறுகிறது.
டீசலுக்காக அதிக விலையை இலங்கை செலுத்துகிறது.
மேலும், 390 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை கடந்த நான்கு மாதங்களாக வழங்காது, அந்த நிதியை டீசல் கொள்வனவுக்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருப்பது அரசாங்கத்தின் திவால் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
இந்தியாவுடன் இரகசியமான முறையில் 07 உடன்படிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது, இதன் மூலம் இலங்கையின் முக்கிய தரவுகளைப் பகிர முற்படுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.
அரசாங்கத்தின் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளால் நாடு மீண்டும் ஒருமுறை வங்குரோத்து நிலையை நோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும்” என்றார்.





