‘ஆபரேஷன் சிந்தூர்’ : பிரதமர் மோடி வழங்கிய உத்தரவு-பல மாதங்களுக்கு பிறகு வெளியான தகவல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பியதை நினைவுகூர்ந்த தோவல் கூறியதாவது:
“விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கள நிலவரங்களை முழுமையாகக் கேட்டறிந்த பிரதமர், என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘இதைச் செய்தது யார்?’ என்பதுதான்.
அதனைத் தொடர்ந்து, ‘பயங்கரவாதிகள் நிலத்தில் இருந்தாலும், ஆகாயத்தில் இருந்தாலும் அல்லது பாதாளத்தில் ஒளிந்திருந்தாலும் அவர்களைத் துரத்திச் சென்று வேட்டையாடுங்கள்; அவர்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது’ என்று பிரதமர் உறுதியுடன் உத்தரவிட்டார்.
நமது உளவு அமைப்புகள் ஆற்றிய மிகச் சிறப்பான பணியால், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் குறுகிய காலத்தில் கண்டறிந்து, மிகத் துல்லியமாக நடவடிக்கை எடுக்க முடிந்தது.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்தியா எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது. நாட்டின் பொறுமையை இந்தியாவின் பலவீனமாகக் கருதிவிடக் கூடாது.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், ‘போய் மோடியிடம் சொல்லுங்கள்… என்ன செய்ய முடியுமோ செய்யட்டும்’ என்று பாதிக்கப்பட்டவர்களிடம் சவால் விடுத்தனர்.
எனவே, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதையோ அல்லது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பதைப் பாகிஸ்தான் ராணுவத்திற்கு உணர வைக்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முதன்மை இலக்காகும். இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ராணுவ பலத்திற்குச் சான்றாக இந்தச் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை அமைந்தது” என்று அஜித் தோவல் தெரிவித்தார்.




