பெண்ணுக்கு எதிராக வன்முறை: Hall Of Fame பட்டியலில் இருந்து நிக்கி வின்மர் அதிரடி நீக்கம்
ஆஸ்திரேலிய கால்பந்து லீக்கின் (AFL) புகழ்பெற்ற முன்னாள் வீரரான நிக்கி வின்மர் (Nicky Winmar), ஆஸ்திரேலிய கால்பந்து புகழ் விருதுப் பட்டியலில் (Hall of Fame) இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக AFL ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
பெண் ஒருவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட மூன்று தாக்குதல் வழக்குகளில் (assault charges) நிக்கி வின்மர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கால்பந்து புகழ்விருதுப் பட்டயத்தில் (Charter) கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புகழ் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர், கடுமையான குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலோ அல்லது AFL அமைப்பிற்கும் ஆஸ்திரேலிய கால்பந்து விளையாட்டுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் (disrepute) நடந்துகொண்டாலோ, அவரை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கும் அதிகாரம் AFL ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
AFL ஆணையத்தின் தலைவர் கிரெய்க் டிரம்மாண்ட் (Craig Drummond) இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்:
“இந்த உயரிய கௌரவத்தின் நேர்மையையும் நன்மதிப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எங்களது சமூகத்திலோ, விளையாட்டிலோ அல்லது ஆஸ்திரேலிய கால்பந்து புகழவிருது அமைப்பு போற்றும் விழுமியங்களிலோ எந்தவொரு இடமும் இல்லை.
ஆஸ்திரேலிய கால்பந்து விளையாட்டிற்கு நிக்கி வின்மர் ஆற்றிய முக்கிய பங்களிப்பையும் எங்களது வரலாற்றில் அவருக்குள்ள இடத்தையும் ஆணையம் மதிக்கிறது.
இருப்பினும், அவருக்கு எதிராக அண்மையில் நிரூபிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அவர் தொடர்ந்து இந்த புகழவிருதுப் பட்டியலில் நீடிப்பதை தகுதியற்றதாக ஆக்கியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


