உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகள், ரஷ்யாவுக்கு அழுத்தம் – பிரான்ஸ் வலியுறுத்து
உக்ரைனுக்கு புதிய இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் Kryvyi Rih ரஷ்யா தீவிர தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து மக்ரோன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 குழந்தைகள் உட்பட 130 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீதான இந்தத் தாக்குதல், ஐரோப்பா முழுவதிலும் உள்ள முக்கிய பிரமுகர்களிடமிருந்து கண்டனத்தைத் தூண்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதரான காஜா கல்லாஸ் Kaja Kallas, இதை “திட்டமிட்ட பயங்கரவாதம்” என்று அழைத்துள்ளார்.
அதேநேரம் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மக்ரோன், “உக்ரைன் தனது வான்வெளியைப் பாதுகாக்கவும், இந்த ஆக்கிரமிப்பை முறியடிக்கவும் தேவையான அனைத்து வழிமுறைகளையும் வழங்குவது மிகவும் முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தடுப்பு ஏவுகணைகளை நிலைநிறுத்துவது உட்பட, பாரிஸின் அதிகரித்த ஆதரவு” குறித்து ஜெலென்ஸ்கிக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சண்டையை நிறுத்தி சமாதானம் செய்ய ரஷ்யா மறுக்கும் வரை, அதன் மீதான அழுத்தத்தை நாம் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்,” என்றும் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.




