நேட்டோ பாதுகாப்பு செலவீனம் – நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் 05 நாடுகள்
ஐந்து நேட்டோ உறுப்பு நாடுகள் 2026-ஆம் ஆண்டிலேயே தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தை பாதுகாப்பு செலவீனத்திற்காக ஒதுக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்காராவில் நடைபெறவிருந்த உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, இன்று நேட்டோ வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் நேட்டோவில் அங்கம் வகிக்கும் மேலும் சில நாடுகள் 02 சதவீதத்தை மட்டுமே ஒதுக்க நிர்ணயித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டணி உறுப்பு நாடுகள், பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஹேக்கில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், நேட்டோ தலைவர்கள், ஆயுதங்கள் மற்றும் படைகள் போன்ற முக்கியப் பாதுகாப்பு அம்சங்களுக்காக 2035-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தனர்.
மேலும், இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவது போன்ற பரந்த அளவிலான பாதுகாப்பு தொடர்பான முதலீடுகளுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 1.5 சதவீதத்தை முதலீடு செய்யவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.




