கேரளாவின் வயநாட்டில் பாரிய நிலச்சரிவு – மூவர் உயிரிழப்பு
கேரளா வயநாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு (Wayanad) மாவட்டத்தின் மேப்பாடி (Meppady) அருகேயுள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட இரட்டைச் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், கட்டுமானப் பணியின்போது வெட்டப்பட்ட மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் உள்ளூர் மக்களால் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவின் போது அங்கிருந்த தற்காலிக தங்குமிடங்கள், பணியாளர்கள் பயணிக்கும் பேருந்து மற்றும் ஒரு எரிபொருள் டேங்கர் லொறி ஆகியவை அடித்துச் செல்லப்பட்டு மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவின் கோரப் பிடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்புப் படை மற்றும் காவற்துறையினர் மோப்ப நாய்களுடன் இணைந்து அங்கு தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.




