ராணுவ நிதிப் போர்: பிரிட்டன் அரசுக்குள் சர்ச்சை!
பிரிட்டனின் புதிய பாதுகாப்புச் செயலர் டான் ஜார்விஸ், நாட்டின் ராணுவச் செலவினத் திட்டங்களை மறுஆய்வு செய்து கூடுதல் நிதியைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் நிதி அமைச்சை மீண்டும் அணுகக்கூடும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் சில முக்கிய அம்சங்களுக்குப் புதிய அமைச்சர் ஜார்விஸ் முன்னுரிமை அளிக்கவுள்ளதாகப் அரச தரப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜான் ஹீலி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, இத்திட்டம் வரும் ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், நிதி அமைச்சு, பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் பணம் வழங்குமா அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களைக் குறைத்து நிதியைச் சரிசெய்யுமா என்பதில் அமைச்சரவைக்குள் பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நவீன தொழில்நுட்பங்களான ட்ரோன்கள் மற்றும் தானியங்கி கப்பல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க விரும்புவதால், பழைய ராணுவத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவுடன் தொடர்புடைய கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலை குறித்த விவாதங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.




