இலங்கை செய்தி

இலங்கையில் தென்படவுள்ள விண்கல் மழை – விண்வெளி ஆர்வலர்களுக்கு அரிய தருணம்

வருடந்தோரும் விண்வெளி ஆர்வலர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை,

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற ‘ஹேலி வால்நட்சத்திரம்’ விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும் போது இந்த விண்கல் மழை ஏற்படுகிறது.

இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து, வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாகத் தோன்றும்.

இந்த விண்கல் மழை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை நீடித்தாலும், மே 6 ஆம் திகதி அதிகாலை வேளையில் அதிகப்படியான விண்கற்களைக் காண முடியும்.

மே 6 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு மேல், கிழக்குத் திசை வானத்தை நோக்கிப் பார்ப்பது சிறந்தது.

வானம் தெளிவாகவும் வெளிச்சம் குறைவாகவும் இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 40 முதல் 85 விண்கற்கள் வரை தென்பட வாய்ப்புள்ளது.

இந்த விண்கற்கள் அக்குவாரியஸ் விண்மீன் கூட்டத்திலிருந்து உருவாவது போன்ற தோற்றத்தை அளிக்கும். இதனால் இதற்கு ‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வானியல் நிபுணர்கள் கருத்துப்படி, இந்நிகழ்வை வெற்றுக் கண்ணாலேயே பார்க்கலாம். இதற்கு எவ்விதத் தொலைநோக்கிகளும் தேவையில்லை.

ஒளி மாசற்ற (Light pollution) இருளான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.

உயரமான கட்டிடங்கள் இல்லாத வெட்டவெளியான இடத்திலிருந்து கிழக்குத் திசை வானத்தை உற்று நோக்கி பார்க்க வேண்டும்.

நாட்டிலுள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!