மெலானியா டிரம்பின் ராஜதந்திரம் வெற்றி: உக்ரைன் நகரில் போர் நிறுத்தம்
ரஷ்யாவினால் 2022 பெப்ரவரி முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெற்கு உக்ரைனின் ஒலெஷ்கி (Oleshky) நகரில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் (Melania Trump) ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர்நிறுத்தத்தை உறுதிசெய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஒலெஷ்கி நகரில் விரைவில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என மூத்த உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ரஷ்யா இதுவரை எந்தக் கருத்துமே தெரிவிக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மீண்டும் தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அணுகுமுறையானது உக்ரைன் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதையும், அண்மைக்காலமாக ரஷ்யாவிற்குச் சில சலுகைகளை வழங்குவதையும் உள்ளடக்கியுள்ளது.
வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மெலானியா டிரம்ப் கூறுகையில், “ஒலெஷ்கி நகரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பேரழிவின் விளிம்பில் உள்ள அந்தப் போர்க்கள நகரில் வசிக்கும் மக்களுக்குக் குறைந்தளவே மின்சார வசதி உள்ளது; வீதிகள் கண்ணிவெடிகளால் சூழப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். எனது தலையீடு இல்லாமல், நகருக்குள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதோ அல்லது முதியவர்களை வெளியேற்றுவதோ சாத்தியமற்றது என்பது தெளிவாகத் தெரிந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது பிரதிநிதிகள் “ரஷ்ய மற்றும் உக்ரேனியத் தலைமையுடன் நேரடியாகச் செயல்பட்டு இந்த உள்ளூர் போர்நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை வரைைறுத்தனர்” என்றும், இரு நாடுகளின் சிவில் தலைவர்களும் இணைந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்வார்கள் என்றும் முதல் பெண்மணி தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்னர் 24,000 மக்கள்தொகையைக் கொண்டிருந்த ஒலெஷ்கி நகரை, 2022 பெப்ரவரியில் முழு அளவிலான படையெடுப்பின் முதல் நாளிலேயே ரஷ்யா கைப்பற்றியதுடன் தீவிரத் தாக்குதல்களையும் நடத்தியது. பெரும்பான்மையான மக்கள் வெளியேறிவிட்ட நிலையில், அங்கு எஞ்சியுள்ள மக்கள் கடும் உணவு மற்றும் மருத்துவப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் மூலம், அங்கு எஞ்சியுள்ள சுமார் 2,000 மக்களில் வெளியேற விரும்பும் நபர்கள், ரஷ்யா அல்லது உக்ரைனில் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மெலானியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.




