நாளை பாரிய போராட்டம்: ராகுல் காந்தி விடுத்துள்ள அறைகூவல்
இந்தியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான INDIA கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணிக்கு முன்னதாக, மக்களை அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை (நவம்பர் 1) நடைபெறவுள்ள இந்தப் பேரணிக்கு முன்னதாக, டெல்லியில் இடம்பெறவுள்ள அணிவகுப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்டோ வீதி – கொனாட் பிளேஸ் சந்திப்பிலிருந்து நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் இந்த அணிவகுப்பு, ராம்லீலா மைதானத்தைச் சென்றடையவுள்ளது.
இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், வாக்குத் திருட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பான சர்ச்சைகளும் இந்தப் போராட்டத்தின் முக்கிய விவகாரங்களாக உள்ளன.
இதற்கிடையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த ‘மக்கள் பதவி நீக்க நடவடிக்கை’ நிகழ்வு, டெல்லியில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இன்று (31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்தப் பேரணியில், அரசியல் கட்சிகளைச் சாராத பொதுமக்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.




