ஆஸ்திரேலியாவில் நிலத்தடி பன்கரில் 2.7 டன் கோகோயின் பறிமுதல்
ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள நிலத்தடி பன்கர் அமைப்பிலிருந்து (Underground bunker) அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக 2.7 டன் கோகோயின் cocaine போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கோகோயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 816 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் சோதனையின் போது பொலிஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற 21 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வணிக ரீதியிலான போதைப்பொருளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
ஒரு சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலின் உத்தரவின் பேரில், வட குயின்ஸ்லாந்தில் உள்ள மிட்ஜ் பாயிண்ட் (Midge Point) என்ற சிறிய நகரம் வழியாக இந்த கோகோயின் ஆஸ்திரேலியாவிற்குள் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் மிட்ஜ் பாயிண்டில் உள்ள ஒரு படகுத் தளத்திற்கு அருகில் தண்ணீரில் 40 கிலோ கோகோயின் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, “ஆபரேஷன் மின்ஜியாங்” என்ற சிறப்புத் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே இந்த லண்டன்டெர்ரி சோதனை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிரதான கப்பல் (Mother vessel) ஒன்று சாலமன் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.




