பிரதமர் இன்று தீர்க்கமான முடிவு: லேபர் கட்சி தலைவராகிறார் Andy Burnham
பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரவை மற்றும் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற Makerfield இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் (Labour Party) வேட்பாளரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அமோக வெற்றி பெற்றார். Reform UK கட்சியின் சவாலை முறியடித்து, தொழிற்கட்சியின் வாக்கு வங்கியை அவர் பலப்படுத்தியுள்ளார்.
இந்த வெற்றியானது, தொழிற்கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கீர் ஸ்டார்மருக்கு எதிராகப் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ வழியை ஆண்டி பர்ன்ஹாமுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன் காரணமாக, ஸ்டார்மர் உடனடியாகப் பதவி விலகும் திகதியை அறிவித்து, பர்ன்ஹாம் தலைமைப் பொறுப்பை ஏற்க வழிவகை செய்ய வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமரின் நெருங்கிய அமைச்சரவை சகாவும், வர்த்தகச் செயலாளருமான பீட்டர் கைல் (Peter Kyle) பிபிசியிடம் இது பற்றி கருத்து வெளியிடுகையில்,
” கடந்த வாரம் மற்றும் அதற்கு முந்தைய வார நிலவரத்தோடு ஒப்பிடுகையில், இன்றைய அரசியல் யதார்த்தங்கள் என்ன என்பதை பிரதமர் நிதானமாகச் சிந்தித்து வருகிறார்.
தொழிற்கட்சியின் எதிர்காலம் மற்றும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே அவர் ஒவ்வொரு முடிவையும் எடுப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.” – என்று குறிப்பிட்டார்.
தொழிற்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரப்பூர்வ நடைமுறைக்கு பொதுவாக 6 வாரங்கள் வரை ஆகும்.
மீண்டும் ஒரு உள் கட்சித் தேர்தல் நடத்தப்பட்டால், அது தேவையற்ற ஸ்திரமின்மையையும், அரசாங்க முடிவுகளில் தாமதத்தையும் ஏற்படுத்தும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆண்டி பர்ன்ஹாம் திங்கட்கிழமையன்று வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றத்திற்கு வந்து முறைப்படி தனது எம்.பி பதவியை ஏற்கவுள்ளார்.
பிரதமர் பெரும்பாலும் பதவி விலகக்கூடும் எனவும், கட்சியின் புதிய தலைவராக Andy Burnham) நியமிக்கப்படக்கூடும் எனவும் அறியமுடிகின்றது.




