ஜப்பான், இந்தியா உறவை வலுப்படுத்த வியூகம்
ஜப்பான் பிரதமர் சனாயே தகைச்சி (Sanae Takaichi) தனது முதலாவது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை இன்று (02) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகைச்சி, தற்போது இந்தியாவுக்கான தனது கன்னிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக அவர் புதன்கிழமை டெல்லி வந்தடைந்தார்.
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜப்பான் பிரதமர்,
“இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு நான் வந்தடைந்துள்ளேன். ஜப்பான் பிரதமராக, ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நான் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். தனிப்பட்ட முறையில், நான் இந்நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அமையும் என்று தகைச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.





